தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காமராஜ் நகரில் தங்கம்மாள்(95) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம்மாள் முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு திட்டமூடி ரோட்டில் இருக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தங்கம்மாளின் வங்கி கணக்கில் முதியோர் உதவி தொகை வரவு வைக்கப்பட்டது.

ஆனால் வங்கி அதிகாரிகளோ சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளோ தங்கம்மாளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. பல மாதங்களாக உதவித்தொகை எடுக்காததால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டது. இதுகுறித்து தங்கம்மாள் கூறும் போது எனக்கு முதியோர் உதவித்தொகை வந்துள்ளதா என பலமுறை வங்கிகளும் தாலுக்கா அலுவலகத்திலும் கேட்டு வந்தேன். அதற்கு அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை.

உறவினர் ஒருவர் மூலம் வங்கி கணக்கு புத்தகத்தை வங்கியில் இருக்கும் இயந்திரத்தில் பதிவு செய்து பார்த்தபோது ஏப்ரல் மாதம் வரை உதவி தொகை வழங்கப்பட்டதும், அந்த பணத்தை எடுக்காததால் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மொத்த 36,000 ரூபாய் பணமும் திரும்ப எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. எனக்கு மீண்டும் முதியோர் உதவி தொகை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளேன் என மூதாட்டி கூறியுள்ளார்.