இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளில் 10,536 பேர் உயிரிழந்துள்ளதாக, டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு உயிரிழப்புகளில் 5 சதவீதம் குறைவு காணப்பட்டுள்ளது. இவ்வாண்டு 10,066 விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், 570 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேகமாக வாகனம் ஓட்டிய 1.05 லட்சம் பேர், செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டிய 2.31 லட்சம் பேர், மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1.13 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டங்களை மீறிய 76.15 லட்சம் பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இத்தகைய தவறுகளுக்கான தண்டனையாக, 1.82 லட்சம் பேர்களின் டிரைவிங் லைசென்ஸ்களை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 39,924 பேர்களின் லைசென்ஸ்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.