திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திண்டுக்கல்லில் அதிரடி சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திண்டுக்கல் பேருந்து நிலையத்தை சுற்றி செயல்படும் 10 மாம்பழ குடோன்களில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனையடுத்து 5 குடோன் உரிமையாளர்களுக்கு தலா 3000 வீதம் அதிகாரிகள் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். மீண்டும் கார்பைட் கல்மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.