மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அண்மையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கடைபிடிக்கப்படுகிறது. கடந்த மாதம் 27-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நோ ஹெல்மெட் நோ பெட்ரோல், நோ சீட் பெல்ட் நோ ப்யூயல் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்டத்தில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளனர். அதில் பெட்ரோல் பங்க்குக்கு  ஹெல்மெட் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் கொடுக்க வேண்டும் எனவும், விழிப்புணர்வு வாசகங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும் இதற்கு பொதுமக்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அது தொடர்பாக புகார் கொடுக்கலாம் என்றும் தாசில்தார்கள் கூறியுள்ளனர்