பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

கனமழையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று (6/02/2023) அமைச்சர்கள் சந்தித்து விளக்கியதோடு, அதுகுறித்த அறிக்கையையும் வழங்கினர். அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பின்வரும் நிவாரணத் தொகுப்பை வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின் படி, 33% மற்றும் அதற்கு மேலாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ. 20,000 வழங்கப்படும். நெல்அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதம் அடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடு தொகையாக ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.