திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, ஏரியோடு, தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 11:25 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டதால் நில அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அலறியடித்து கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில் வடமதுரை ரயில் நிலைய சாலையில் இருக்கும் தனியார் பள்ளி வளாகத்தில் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வெடி சத்தம் கேட்ட சமயத்தில் புகையுடன் வானில் இருந்து பறந்து வந்த மர்ம பொருள் காரின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யார் மீதும் மர்ம பொருள் விழாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம பொருளை சோதனை செய்தனர். இந்நிலையில் 6 அங்குலம் அகலமும், 3 அங்குலம் உயரமும் உடைய அந்த மர்ம பொருள் பிளாஸ்டிக்கால் ஆன ஒரு பெரிய குழாயின் மூடி போன்ற தோற்றத்தில் இருந்தது. அதன் உள்பகுதியில் மூடியின் எடையை அதிகரிக்கும் விதமாக சிமெண்டால் பூசப்பட்டிருந்தது. இதனையடுத்து 750 கிராம் எடை உடைய மர்ம பொருளை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.