திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு நகர சபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கியுள்ளார். பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொதுமக்கள் மாட்டு கொட்டகையில் தங்களது மாடுகளை கட்டி வளர்த்து பராமரிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் சட்டம் 1997-ன் படி 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டத்தை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289 இல் படியும் பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 11 எச்-ன் படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் வருவாய் துறையினர் கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.