உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய மும்பை பயங்கரவாத தாக்குதல் கடந்த 2008இல் நடைபெற்றது. இதில் மும்பைக்குள் புகுந்த லஷ்கர் இ தொய் பா தீவிரவாதிகள் சிலர் மும்பையில் பெரும்பாலான இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தினர். இந்த குண்டுவெடிப்பில் சுமார் 166 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இறந்த நபர்களில் 6 பேர் அமெரிக்கர்கள். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அஜ்மல் கசாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இதை தொடர்ந்து இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாகூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் குடியுரிமை பெற்று தலைமறைவாக இருந்து வந்தார். அங்கு கடந்த 2009 ஆம் ஆண்டு குற்றவாளத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்த விதிமுறையின்படி, ஹுசைன் ராணா மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதி ராணாவை இந்தியா ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டது.

அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கால தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் கோரிக்கை மனுவை  விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வரும் ஆண்டில் ராணா இந்தியாவிற்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.