சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் கிருத்திகா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கிருத்திகாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் வழக்கறிஞராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதாப் வழக்கை நடத்தி தருவதாக கூறி கிருத்திகாவிடம் 1 1/2 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இதனையடுத்து வழக்கு தொடர்பாக கேட்டால் எந்த பதிலும் சொல்லாமல் பிரதாப் காலம் தாழ்த்தியுள்ளார்.

இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது பிரதாப் கிருத்திகாவை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக கிருத்திகா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பிரதாப் வழக்கறிஞரே இல்லை என்பது தெரியவந்தது. அவர் வழக்கறிஞர் போல் நடித்து பெண்ணிடம் இருந்து பணத்தை மோசடி செய்துள்ளார். இதனால் பிரதாப்பை போலீசார் கைது செய்தனர்.