திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரம், படிப்பாதை, ரோப்கார் ஆகிய இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் சுவர்கள் மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று செல்பி எடுக்கின்றனர். இந்நிலையில் பழனி கோவில் வெளி பிரகாரத்தில் வைத்து பக்தர் ஒருவர் குரங்குடன் நின்று செல்பி எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென பாய்ந்து குரங்கு பக்தரின் செல்போனை பறித்துக் கொண்டு கோவில் கட்டிடத்தில் ஏறி சென்றது. இதுகுறித்து பக்தர் கோவில் பணியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் பழம், பிஸ்கட் என பல்வேறு உணவுப் பொருட்களை காண்பித்து செல்போனை பெற முயன்றனர். ஆனால் குரங்கு செல்போனை கையில் வைத்து கொண்டு அங்கும், இங்கும் ஓடி அதனை கடித்து பார்த்தது. ஒரு கட்டத்தில் குரங்கு செல்போனை கீழே போடுமா? என பக்தரும் கோவில் பணியாளர்களும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் செல்போனை கையில் வைத்தபடி குரங்கு அங்கிருந்து சென்றது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது, பழனி முருகன் கோவிலில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகிறது. குரங்குகள் கிடைக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு வாழ்கிறது. பக்தர்கள் சிலர் குரங்குடன் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் குரங்குகள் பக்தர்களை தாக்குகின்றது. எனவே பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.