மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவின் மால்டோவில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அமைந்துள்ள அம்ரிதி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் வழங்கப்படும் கோழியின் கால் மற்றும் சதை பகுதிகளை ஆசிரியர் வைத்துக்கொண்டு மற்ற எலும்பு பகுதிகளை மாணவர்களுக்கு வழங்குவதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

அதேபோல் தரமான அரிசி மற்றும் சிக்கன் லெக் பீஸ்களை பயன்படுத்தி ஆசிரியர்கள் தனியாக உணவு சமைத்து சாப்பிடுவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில்  மதிய உணவில் கோழிக்கறி கிடைக்காததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். வாரம் தோறும் இதே நிலை நீடித்து வந்த நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் பேச்சு வார்த்தை நடத்திய சிறிது நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. அதன் பின் பள்ளியை மாணவர்களும், பெற்றோர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் அந்த பள்ளியில் உள்ள ஆறு ஆசிரியர்களை ஒரு தனி அறையில் வைத்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பூட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களை விடுவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை பள்ளியின் பொறுப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். பெற்றோரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதிய உணவில் லெக் பீஸ் வழங்காததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.