புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சந்திர பிரியங்கா. பெண் சட்டமன்ற உறுப்பினரான இவருக்கு முதலமைச்சர் ரங்கசாமி போக்குவரத்து துறை அமைச்சர்  பதவி வழங்கி இருந்தார். கடந்த இரண்டரை வருடங்களாக அவர் பதவி வகித்து வந்தார். ஆறு மாத காலமாக இவர் பதவியில் சரியான முறையில் செயல்படவில்லை என்று  முதலமைச்சர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டதையடுத்து, முதலமைச்சர் ரங்கசாமி இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

அந்த கடிதம் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று வருவதற்கு முன்பாகவே இதை அறிந்த அமைச்சர் சந்தர பிரியங்கா முன்னதாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாக  முதலமைச்சர் ரங்கசாமிக்கும்,  துணைநிலை ஆளுநருக்கும்  ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த ராஜினாமா கடிதத்தை அவர்  அனுப்பி இருந்தார்.

தான் அமைச்சர பதவியில் இருப்பதன் காரணமாக ஆண் ஆதிக்க சக்தியும், பாலியல் ரீதியாக நான் தாக்கப்படுவதாகவும் அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இது  புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கடிதம் பத்து நாட்களுக்கு மேலாகியும் அதற்கான ஒப்புதல் வழங்காமல் இருந்தது. இது புதுவை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அமைச்சர்  சந்திர பிரியங்கா நீக்கத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து,  குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. தற்போது குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் வந்துள்ளது. இதனால் ஆறு அமைச்சர்கள் புதுவையில் இருந்த நிலையில்,  தற்போது போக்குவரத்து அமைச்சர் நீக்கப்பட்ட நிலையில் ஒரு அமைச்சர் பதவி காலியாகி உள்ளது.