அருணாசலப்பிரதேசத்திற்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா, பின் அசாம் மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து அவர் திப்ருகரில் பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது “ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக இருந்தது.

அண்மையில் ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றபோதிலும், 3 வட கிழக்கு மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 300-க்கு அதிகமான தொகுதிகளில் வெற்றியடைந்து ஆட்சிக்கு வரும். மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராவார். முன்பெல்லாம் அசாம் என்றால் போராட்டம், பயங்கரவாதம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது அமைதி தவழ்கிறது. இதனால் மக்கள் இசைக்கேற்ப நடனம் ஆடுகின்றனர் என அவர் பேசினார்.