தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி மார்ச் 17-ம் தேதி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது பற்றி தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது, ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் இதற்கு ஆவின் நிறுவனம் செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும். கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட இருக்கிறோம் என்றும்‌ கூறினார். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் ஒரு லிட்டருக்கு ரூ. 32-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இது போக அவர்களிடம் இருந்து இதர பால் பொருட்களும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிர்வாகத்துக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் ரூ.7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் ஆவின் நிர்வாகம் நிதி நெருக்கடி இருப்பதால் கொள்முதல் தொகையை அதிகரிக்க முடியாது என கூறிவிட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால் தற்போது போராட்டம் நடத்துவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் இதனால் ஆவின் பால் விநியோகம் பாதிப்படையும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியுள்ளது.