பொதுவாக தலைவர்கள் என்பவர்கள் உருவாகுகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிறார்கள். அதேபோலத்தான் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட பகத்சிங் என்ற தலைவன் உருவாக்கப்படவில்லை. அவனே தலைவனாக உருவாகினான். பகத்சிங் பஞ்சாப் மாநிலம் பங்கா கிராமத்தில் 1907 ஆம் வருடம் செப்டம்பர் 24 ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை கஹன்சிங்க், தாயார் வித்தியாபதி. இவர் தன்னுடைய 14 வது வயதில் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றார்.

திடீரென்று ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதால் நேதாஜியை போல காந்திய கொள்கையில் இருந்து விலகி புரட்சிகர விடுதலைப் போராட்டப் பாதையை தேர்வு செய்தார் பகத்சிங். இதன் காரணமாக தன்னுடைய அன்பான குடும்பத்தையும் பிரிந்தார். வீட்டை விட்டு வெளியேறி நாட்டு விடுதலை நோக்கி பகத்சிங் தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்தார். அப்படி போகும் பொழுது தன்னுடைய தந்தைக்கு பகத்சிங் அலுவலக மேஜையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அதில் மரியாதைக்குரிய அப்பாவிற்கு… என்னுடைய வாழ்க்கை ஒரு உன்னத லட்சியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அது இந்தியாவினுடைய சுதந்திரம் என்னும் லட்சியம் தான். அதனால் இந்த உலகில் வாழ்வின் ஆசைகளுக்கு என் வாழ்வில் இடமில்லை என்று எழுதியுள்ளார். பகத்சிங் 1924 ஆம் வருடம் நவஜவான் பாரசபை என்ற புரட்சிகரமான அமைப்பை தன்னுடைய தோழர்களான சுகதேவ, யாஷ்பால், பகவதி சரண் போன்ற இளம் தலைவர்களின் உதவியுடன் விடுதலைக்கான போராட்டத்தில் களம் இறங்கினார். கொள்கை பிடிப்பு சைமன் கமிஷன் 1928 ஆம் வருடம் இந்தியாவிற்கு வந்த பொழுது நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

லாகூர் ரயில் நிலையத்தில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் அங்கே தடியடியில் காயமுற்று மரணம் அடைந்தார் பஞ்சாப் சிங்கம். இதற்கு பழி தீர்க்கும் விதமாக பகத்சிங் லாலா லஜபதிராயின் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரியான சாண்டர்சை மண்ணில் சாய்த்தார். இந்த நிகழ்வை நாட்டின் கௌரவத்தையும் லஜபதிராயின் கௌரவத்தையும் பகத்சிங் காப்பாற்றியதாக நேரு தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். இப்படி இவருடைய சுதந்திரப் போராட்டத்திற்கான வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் 1931 ஆம் வருடம் மார்ச் 23ஆம் ஆண்டு தனக்காக வழங்கப்பட்ட தூக்கு கயிற்றை முத்தமிட்டு இந்த மண்ணிலிருந்து மறைந்தார் பகத்சிங்.