நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் பல்லாவரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு மது போதையில் பாஜகவை சேர்ந்தவர்கள் சிலர் பெண்களை கிண்டல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போலீஸ் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களை கைது செய்ததற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதோடு விசாரணை என்ற பெயரில் அவர்களை தாக்கியதாகவும் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனையும் பாஜகவினர் சுற்றி வளைத்தனர். அப்போது கோபமடைந்த துணை ஆணையர் அதிவீர பாண்டியன், போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து காவல்துறையினரும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி தானே விசாரணை நடத்திக்கொள்வதாக கூறிய அவர், பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களையும் விடுவித்தார்.