
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சி தலைவரான விஜய், எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ள கட்டவுட்டுகள் பலரையும் கவர்ந்துள்ளது. அதாவது மாநாட்டு மேடைக்கு, இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்டவுட் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று மேடையின் வலது புறத்தில் தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்டவுட்களும் இடம்பெற்றுள்ளது. மாநாட்டு திடலில் நுழைவு வாயில் இருபுறமும் விஜயின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதோடு 100 அடி கொடிக்கம்பம் நேற்று நடப்பட்டது. இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30அடி அகலமும் கொண்ட கொடி பறக்க இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இந்த கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நாளை மாலை 4 மணி அளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் விஜய் கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.