கரூர் சட்டமன்ற தொகுதி ஆண்டாங்கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட 43 இடங்களில் சாலைகள் அமைத்தல், கழிவுநீர் சாக்கடை அமைத்தல், குடிநீர் தொட்டி, ஆழ்துளை மற்றும் தொட்டி அமைத்தல் ஆகிய கட்டுமானப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவங்கி வைத்தார். 10 கோடியே 55 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று அமைச்சர் துவங்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது “பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பே 96 கடைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சுமார் 600 கடைகள் மூடப்படும். இது மொத்தம் உள்ள கடைகளில் 11 சதவீதம் ஆகும். புதியதாக டாஸ்மாக் கடைகளை திறப்பது இல்லை. இடமாற்றம் செய்யப்படும் கடைகளை புது கடைகள் திறப்பதாக தவறாக புரிந்துக்கொள்கின்றனர்.

அதன்பின் கோடைக்காலத்தில் மின்தடை ஏற்படாத வண்ணம் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மின்துறை சார்பில் புகார்கள் ஏதும் இருப்பின் மின்னகம் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக சரிசெய்யப்படும். 3 மாதத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் பெற்றால் 1312 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும்.