கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறையினர் அனைவரையும் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதையடுத்து திடீரென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர்.
இதனை தடுத்ததால் போலீசார் மீது இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்த இளைஞர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு மறியலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் அதிவிரைவு படையினரின் நடவடிக்கையால் போக்குவரத்து பாதிப்பு நீக்கப்பட்டு மீண்டும் சேவை துவங்கியது.