திரை உலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் சவால் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பார். கடந்த 1980-களில் மூன்றாம் பிறை, நாயகன் படங்களுக்காக கமல்ஹாசன் தேசிய விருதுகளை வென்றார். இதனையடுத்து 90களில் இந்தியன் படத்திற்காக தேசிய விருதையும், 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவர் விருதையும் வந்துள்ளார்.

இந்நிலையில் 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், வேட்டையாடு விளையாடு, தேவர் மகன், தசாவதாரம், இந்தியன் ஆகிய படங்களுக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி தூக்கியவர் கமல்ஹாசன். மேலும் தெலுங்கிலும் சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்துருடு சந்துருடு ஆகிய படங்களுக்காக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

ஃபிலிம் ஃபேர் விருதுகளை அதிக முறை வென்ற நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனை சேரும். ஏக் துஜே கே லியே படத்திற்காக கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதையும், சாகர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் படங்களுக்காக கமல்ஹாசன் வாங்கிய விருதுகள் பல. இதே போல மகாராஷ்டிரா அரசின் சாந்தாரம் விருதை கமலஹாசன் 4 முறை வென்றுள்ளார்.

பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். இதேபோல அன்பே சிவம் படத்திற்காக சிறந்த கதை மற்றும் திரைக்கதைக்கான விருதும் கமல்ஹாசனுக்கு கிடைத்தது. மத்திய அரசு கடந்த 1990-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ, 2014-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு கமல் பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதையும் வென்றுள்ளார்.