கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜாராமுக்கும் கௌசிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கௌசிகா கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட ராஜாராம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி ராஜாராம் எழுதிய கடிதத்தை கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் நான் எதற்கும் சரியில்லாதவன். நான் வாழ்க்கையை எதிர்த்து போராட தகுதி இல்லாத ஆள். இந்த வீட்டை விட்டு போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம். நான் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு நான் மட்டுமே காரணம். வேறு யாருமில்லை என எழுதியுள்ளார். அதனை ராஜாராம் தான் எழுதினாரா? அல்லது வேறு யாராவது எழுதி இருக்கிறார்களா? ராஜாராம் எங்கு சென்றார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.