ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியில் கவாஜா (180 ரன்), கேமருன் கிரீன் (114 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர்.

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 579 ரன்கள் எடுத்தது. இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை வகித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் விராட் கோலி 186 ரன்களும், கில் 126 ரன்களும், அக்சர் படேல் 79 ரன்னும், கே.எஸ் பரத் 44 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் இன்று தொடங்கிய 5-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து போட்டி ட்ரா என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. தொடர்ச்சியாக இந்திய அணி 4 முறை பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றுள்ளது. கடந்த 1996 முதல் இதுவரை 10 முறை பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் இந்திய அணி தொகுதி பெற்றுள்ளது.