உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு விமானப்படை மையத்தில், இந்திய விமானப்படையில் பணியாற்றிய சிவில் பொறியாளர் எஸ்.என். மிஸ்ரா மார்ச் 29 அன்று தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு, 15 நாட்களுக்கு முன்பே, தன் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்ததை குறித்தும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடிதத்தில், கடந்த மார்ச் 14ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் அவரது வீட்டின் கதவில் இருந்த கொசு வலையை வெட்ட முற்பட்ட மர்ம நபர்களின் சத்தத்தைக் கேட்ட அவர், திடுக்கிட்டு எழுந்து சன்னலின் வழியாக பார்த்ததும், இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறியிருந்தார்.

 

பின்னர் நார்த் கேம்ப் காப்புக் காவலரிடம் அவர் புகார் கொடுத்ததாகவும், அந்நிகழ்வை விமானப்படை போலீசார் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை யடுத்து குற்றவாளிகள் விட்டுசென்ற ஒரு செருப்பு, கத்தி, பைப் ராட், கிரில் வெட்டும் கருவி ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், அவர் தன்னுடைய உயிருக்கும் சொத்துக்கும் ஆபத்து இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது, ஒரு பிரஸ் நோட்டில் மிஸ்ராவின் மனைவி வத்சலா, இது திருட்டு முயற்சி அல்ல என்றும், திட்டமிட்ட கொலை என்றும் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.  இந்தக் கொலை தொடர்பாக சௌரப் குமார் மற்றும் அவரது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.