
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள அதன் வர்த்தக கூட்டாளிகள் மீது கடுமையான வரிகளை விதித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களில் அமெரிக்க டாலர் இல்லாத அளவிற்கு பலவீனமடைந்தது. தொழில்நுட்ப பங்குகளும் மிகக் குறைந்த அளவில் இருந்தன.
இதனால் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின் சர்வதேச அழுத்தம் காரணமாக வரி விதிப்பை தற்காலிகமாக இடை நிறுத்தி வைத்தார்.
இதனிடையே அதிபர் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா முழு வரிவிலக்கு அளிக்க சம்மதித்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் விருப்பம் தெரிவித்துள்ளது என ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் பங்கேற்ற ட்ரம்ப் மீண்டும், “உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இருக்க விரும்பும் நாடு இந்தியா. ஆனால் அமெரிக்க பொருட்கள் மீது 100% வரிக்குறைப்புக்கு கூட இந்தியா தயாராக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அது விரைவில் நடக்கும்”என மீண்டும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.