சமீபத்தில் பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் வருகிற 2024 ஆம் ஆண்டிற்குள் ஏஐ துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறியதாவது, சர்வதேச ஏ ஐ திறனை நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்னும் அடுத்த 2 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு 1.5 முதல் 2 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இத்துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும் இது தீர்க்க முடியாத பிரச்சனை கிடையாது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஏஐ  தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் வேகத்துக்கு ஏற்ப திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால், இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் இது உலகில் ஏஐ தொழில்நுட்பத்தில் மாறும் வேகத்தை குறைக்க காரணமாக உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏஐ  பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.