தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவினை இன்று தொடங்கி வைத்தார். சிறார் திரைப்பட விழா மூலம் பள்ளிகள் தோறும் மாதத்திற்கு ஒரு படம் திரையிடப்பட்டு அந்தத் திரைப்படம் சார்ந்த போட்டிகள் வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படும். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். ‌ இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்நிலையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 152 மாணவர்கள் சிறார் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த திரைப்பட விழாவில் குறும்பட போட்டிகள் நடத்தப்படும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவுக்கு உங்களை வேறு யாரையும் நம்பி அனுப்பப் போவது கிடையாது நானே உங்களுடன் வருகிறேன் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.