இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் 1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரப்பண்ணை என்ற கிராமத்தில் நடந்த கதையை வைத்து இயக்குனர் அயலி தொடரை எடுத்து இருக்கின்றார். இதில் பெண்கள் வயதுக்கு வந்தால் படிக்க கூடாது, கோயிலுக்குள் செல்லக்கூடாது. உடனே திருமணம் செய்து விட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் அதை மீறி 13 வயது சிறுமியான தமிழ்ச்செல்வி படிக்க நினைக்கின்றாள். அவர் மட்டுமல்லாமல் தனது தோழிகளையும் முன்னேற்ற நினைக்கின்றார். இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடரின் வெற்றியை படக்குழுவினர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்கள்.

இதில் பங்கேற்ற இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளதாவது, இந்த அயலித் தொடர் கொஞ்சம் தவறி இருந்தாலும் ஆவணப்படமாக மாறி இருக்கும். அப்படி மாறி இருந்தால் இதை எல்லோராலும் ரசிக்க முடியாது. ஆனால் சுவாரஸ்யமாக ரசிக்கும் படி இயக்குனர் அயலி தொடரை வழங்கி இருக்கின்றார். ஒவ்வொரு எபிசோடு முடிந்ததும் அடுத்த எபிசோடு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகின்றது. தொடரின் கதாநாயகியாக நடித்த அபியை எனது மகளாக நினைத்துக் கூறுகின்றேன்.

கண்டிப்பாக உனக்கு தேசிய விருது கிடைக்கும், மாநில விருதும் கிடைக்கும். இந்த வயதில் இவ்வளவு அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கின்றாய். 17 வயது தான் ஆகின்றது இருப்பினும் இந்த அளவிற்கு நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வெற்றியை கொடுக்க வேண்டும். உனது பலமும் பலவீனமும் உனக்கு நன்றாக தெரியும். அதை நீ உடைத்து கடந்து வர வேண்டும். இனிவரும் ஒவ்வொரு திரைப்படங்களும் வெற்றியாக அமைய வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.