மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சத்திராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1இல்  துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காக விண்ணப்ப அழைப்பு விடுத்தது.  அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். முதல் நிலை தேர்ச்சி  தேர்வில் தேர்ச்சி பெற்று,  எழுத்து தேர்வு எழுதினேன். தமிழ் வழி கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்த போது தமிழ் வழி கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டில் சலுகை தொழிற்கல்வியில் பயின்று வருபவருக்கு  வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலைக் கல்வியில் பயில்வோர் சில பாடங்கள் ஆங்கில வழியில் பயின்று இருக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றதாக கருத இயலாது என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம்,  ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை மதுரை காமராஜ் பல்கலைக்கழக கழகத்திற்கும்,  தமிழ்நாடு அரசுக்கும் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகள் குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்காததால் சத்திராவ்  மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் சுப்பிரமணியன் மற்றும் பி.புகழேந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது தமிழ் வழி கல்வியில் 34 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில்  5 பேர் சான்றிதழ்கள் தவறானவைஎன கூறப்பட்டுள்ள நிலையில்,  5 பேரில் ஒருவரின் சான்று உண்மை என தெரியவந்துள்ளது. மற்ற  பல்கலைக்கழக சான்றிதழ்கள் குறித்து எந்த பதிலும் இல்லை.  சான்றிதழ்கள் சரிபார்ப்பக்கப்படவும் இல்லை. இதனை தொடர்ந்து  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர்,  சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள்  விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள்,  லஞ்ச ஒழிப்பு துறைக்கு விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. தேவைப்படும் இடங்களில் குற்றவியல்  வழக்கு பதிவு செய்து,  சோதனை நடத்தி கைது செய்யவும்,  நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அரசு தேர்வுகளை நம்பி கடை கோடியில் உள்ள ஏழை மாணவர்கள்,  நல்ல மதிப்பெண் பெற்று படித்துக் கொண்டு இருக்கும்  மாணவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையும்  கேள்விக்குறியாகி உள்ளது.

இது போன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும்  சீரழிவு செய்யும். 10 ரூபாய் லஞ்சம் பெறும் நபரை வேகமாக கைது செய்யும் காவல்துறை, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் பெரும் முதலைகளை விட்டு விடுகின்றனர். விசாரணை அதிகாரிகள் பல்கலைக்கழகங்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.