ஐபிஎல் நடப்பு தொடரில் நேற்றைய தினத்தோடு லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் முன்னேறிய நிலையில் இரண்டாவது அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றது. அதன் பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் ப்ளே ஆப் சுற்றுகளுக்கு‌ தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ள தகுதி சுற்றில் முதல் அணியாக குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியுடன் இதுவரை சிஎஸ்கே மோதிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதில்லை.

இதனால் இந்த முறை வரலாற்றை மாற்றி குஜராத் அணியை சிஎஸ்கே தோற்கடித்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இதுவரை 9 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிஎஸ்கே 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்பது நாளை தெரிந்து விடும். நாளை மறுநாள் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதுகிறது. இதில் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். இதில் வெற்றி பெற்ற அணி முதலாவது தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் மே 26-ம் தேதி மோதும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மேலும் அகமதாபாத்தில் வருகின்ற 28-ஆம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.