ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு,  நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் சுயேச்சைகள் உட்பட 77 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வேட்பாளர்களுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பரப்புரைக்காக ஆயிரக்கணக்கான அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ள நிலையில்,  இடைத்தேர்தலுக்காக 52 வாக்கு மையங்களும்,  238 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா 5 மின்னணு வாக்கு இயந்திரங்கள் விதம் சுமார் 1430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இடைத்தேர்தலில் மொத்தம் 74. 79 சதவீத  வாக்குகள் பதிவாகின. இதை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் 397 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. இது 23 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.அதுமட்டுமல்ல முதல் சுற்று முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிக வேட்பாளரை விட சுயேச்சை வேட்பாளர் அதிக ஓட்டு பெற்றுள்ளார். தேமுதிகவின் ஆனந்த் 112 வாக்கு பெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா 178 வாக்குகள் பெற்றுள்ளார்.