ரயிலில் ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட்ஷீட்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் அலட்சியம் போன்றவை அடிக்கடி காணப்படுகிறது. இதனை சமாளிக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரயில்வே வாரியமானது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, ரயில்களை சுத்தம் செய்தல், ஷீட், போர்வைகளை துவைத்தல், உணவு வழங்குதல் ஆகிய பணிகளுக்கு இனிமேல் டெண்டர் வெகு நாட்களுக்கு வழங்கப்படாது என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.

இதற்குரிய காலம் குறைந்தபட்சமாக குறைக்கப்பட்டு காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படும். இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் அலட்சியப்போக்கை தவிர்ப்பதோடு பயணிகளும் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள். ரயிலின் அனைத்து வசதிகள் குறித்த டெண்டர் காலத்தை 6 மாதங்களாக குறைக்கப் போவதாக ரயில்வே வாரியமானது தெரிவித்து உள்ளது. முன்பாக இந்த டெண்டர்கள் 3 (அ) 5 வருடங்களுக்கு இருந்தது. கால அவகாசம் முடிந்தவுடன் ஒப்பந்ததாரர்கள் தனக்குள்ள தொடர்புகள் வாயிலாக மீண்டும் டெண்டர் எடுப்பது வழக்கம். இனிமேல் வேலையில் அலட்சியமாக இருப்பின் டெண்டர் நீட்டிக்கப்படாது. குறுகியகால டெண்டர் எனில், ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக இருக்கமாட்டார்கள் என இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..