2024 ஐபிஎல்லின் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே நடக்கும் நிலையில், அந்த போட்டியை பார்க்க டிக்கெட் தேவை என கேட்டுக்கொண்டுள்ளார்.

2024 ஐபிஎல் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சிஎஸ்கேயின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பழைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸை தொடர்பு கொண்டுள்ளார். அஸ்வின் மார்ச் 22 அன்று சென்னையில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடக்க போட்டிக்கு தனது குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்டுள்ளார்.

டிக்கெட் பற்றி அஸ்வின் என்ன பதிவிட்டார்?

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் முதல் 8 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்தார். அவர் சமூக ஊடக தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார். அதில், “சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இன் ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்திற்க்கான டிக்கெட்டுகளுக்கான கோரிக்கை நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. எனது குழந்தைகள் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உதவுங்கள்” என தெரிவித்தார்.

தோனிக்கு நன்றி தெரிவித்தார் :

அஸ்வின் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 500 விக்கெட்டுகளை கடந்த அஸ்வினுக்கு கடந்த வாரம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தோனியின் வழிகாட்டுதலின் கீழ் தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மாறியதாக அஸ்வின் ஒப்புக்கொண்டார். தோனி தனக்கு அந்த வாய்ப்புகளை கொடுத்ததால் தான் அவரது ஆட்டம் மேம்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

சிஎஸ்கே உடனான தனது ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்த அஸ்வின், மேத்யூ ஹைடன் மற்றும் தோனி போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தன்னை எப்படிச் சூழ்ந்தார்கள் என்பதைப் பற்றி பேசினார். முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் நிரம்பிய அணியில் ஆரம்பத்தில் வெளிநாட்டவர் போல் உணர்ந்தாலும், அஸ்வின் தனக்கு கிடைத்த அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் பொக்கிஷமாக வைத்துள்ளார்.