ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹத் மாவட்டத்தில் ஒரு பேருந்து நிலையத்தின் அருகே சூட் கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட உடல் காங்கிரஸ் கட்சி ஹிமானி நர்வால் (22) என்பது தெரியவந்தது. இவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோரா யாத்ராவில் கலந்துகொண்டு முக்கிய பங்காற்றினார்.

இவர் மிகவும் சுறுசுறுப்பான அர்ப்பணிப்பு உள்ள கட்சி பிரமுகர் என ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27 சனிக்கிழமை அன்று இவரது உடல் கண்டெடுக்கபட்டது. அதன்பின் ஹிமானியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து விசாரணை நடத்த அரியானா காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில் ஹிமானியின் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர். ஹிமானியின் கொலை குறித்து அவரது தாயார் சவிதா தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நான் அவரிடம் பேசினேன்.

மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதனால் வேலை அதிகமாக உள்ளது எனவும் கூறியிருந்தார். அதன்பின் அவருடைய தொலைபேசி எண் அணைத்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனது மகளுக்கு நீதி கிடைக்காத வரை நாங்கள் அவரது உடலை தகனம் செய்ய மாட்டோம் என மன வருத்தத்தோடு தெரிவித்து இருந்தார்.

இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது இணையதள பக்கத்தில், தங்களது கட்சியின் திறமையான தொண்டர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.