புது டெல்லியில் ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் கட்டணம் குறித்து புகார் அளித்த இளைஞரை கொலை செய்ய முயற்சித்ததாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவில் விஷால் ஷர்மா என்ற இளைஞர் பயணித்துள்ளார்.

அப்போது ரயிலில் வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில் ரயில்வே துறை அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பதை கண்டித்து ரயில்வே செயலி வழியாக புகார் அளித்துள்ளார். அதில், இந்திய ரயில்வேயின் மூன்றாம் ஏசி பெட்டியில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ரயிலில் தண்ணீர், உணவு பொருள்கள் கூடுதல் கட்டணத்துடன் வசூலிக்கப்பட்டது குறித்து புகார் அளித்ததால் என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது என வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

மேலும் அந்த வீடியோவில், பச்சை சட்டை அணிந்த ஊழியர் ஒருவர் மேல் படுக்கையில் இருந்த சர்மாவை கீழே வரும்படி கோபத்துடன் அழைத்தார். ஆனால் அதற்கு சர்மா மறுப்பு தெரிவித்ததால், உடனே அந்த ஊழியர் படுக்கைக்கு மேல் ஏறி சர்மாவின் காலை பிடித்து இழுத்து அடிக்க தொடங்குகிறார் அதனுடன் வீடியோ துண்டிக்கப்பட்டது.

அதன் பின் சர்மா காயங்களுடன் கிழிந்த சட்டைகளுடன் அவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து நான்கு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து பலரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் அந்த வீடியோ குறித்து ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், அந்த வீடியோவில் குறிப்பிட்ட விற்பனையாளர் 5 ஆண்டுகளுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கூடுதலாக 2 ஆண்டுகள் அந்த தடை நீடிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்திற்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் ரூபாயா 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது என ரயில்வே துறை விளக்கம் அளித்ததுள்ளது.