யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் ரெட் பிக்ஸ் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை வைத்து பேட்டி எடுத்து அந்த வீடியோவை தனது youtube சேனலில் பதிவிட்டார்.

அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை பற்றி அவதூறாக பேசினார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த பத்தாம் தேதி பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சிறையில் இருந்து பெலிக்ஸ் ஜெரால்ட்டை கோவை நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இந்த நிலையில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்தனர். கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த மனு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.