இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த நகரம் கொண்ட பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. பிரபல அவதார் நிறுவனம் இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், 10 லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

இதற்கு அடுத்த இடங்களில் புனே, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோவை மற்றும் மதுரை போன்ற நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து 10 லட்சம் பேருக்கு கீழ் உள்ள மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கான சிறந்த நகரங்களில் திருச்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூர், திருவனந்தபுரம், பெலகாவி போன்ற நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

இதனையடுத்து 10 லட்சம் பேருக்கு மேல் உள்ள மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்கள் வேலை செய்வதற்கான மோசமான நகரங்களின் பட்டியலில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் பீகாரில் உள்ள பாட்னா, அசாமில் உள்ள கௌகாத்தி, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி, உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பெண்கள் வேலை செய்வதற்கான மோசமான 10 லட்சத்திற்கும் கீழுள்ள மக்கள்தொகை கொண்ட நகரங்களில் பீகாரில் உள்ள பகல்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர், மத்திய பிரதேசத்தில் உள்ள சாட்னா, லட்சத்தீவில் உள்ள கவரட்டி போன்ற நகரங்கள் இடம் பெற்றுள்ளது.