நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். மேலும் மிசௌரியில் இருக்கும் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருப்பதாக கூறி ராஜா ஒரு அடையாள அட்டையை காண்பித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு குமாரபாளையத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி பெண்ணை ராஜா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கேட்கும் போதெல்லாம் ராஜா ஏதாவது கூறி சமாளித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் தனது கணவரின் கல்வி ஆவணங்களை ரகசியமாக எடுத்து பார்த்த போது அவர் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்டபோது ராஜா தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது கணவர் ராஜா ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவரது தாய் சாந்தி, தந்தை கந்தசாமி, சித்தி தமிழ் செல்வி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜா உள்பட நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.