மக்களவையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் மீது பல்வேறு தரப்பினரும் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ள நிலையில், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில்  ஐடி துறையில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்தியாவில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு பல பிராந்தியங்களில் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்பது நிறுவனங்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது.

இந்தியா ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் பிளவு கொண்ட நாடாக இருக்கும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு இரண்டிலும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் பின் தங்கியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இ-காமர்ஸ் தொடர்பான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும். வரிச் சுமைகளை குறைப்பதன் மூலமும் இ-இன்வாய்ஸிங்கை ஊக்குவிப்பதன் மூலமாகவும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஊக்குவிக்க முடியும். மென்பொருள் மற்றும் பிற டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான வலுவான பாதுகாப்புச் சட்டங்கள் புதுமைகளை ஊக்குவிக்க தொழில் முதலீடுகளை புதுப்பிக்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குதல் மூலமும் ஏற்றுமதி சேவைகளை அதிகரிக்க முடியும்.