தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இக்கட்சி விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை, அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இவர் தவெகவுக்கு பணியாற்ற ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.