சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி சற்று முன் பதவியேற்றுள்ளார். விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என 21 மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினர்.

ஆனால் மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர் விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்கலாம் என ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதினர். இதைத்தொடர்ந்து கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், விக்டோரியா கௌரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணியமத்தப்பட்டனர். இவர்கள் இன்று நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டனர். மேலும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விக்டோரியா கௌரிக்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.