
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர் கவாய் பொறுப்பேற்கிறார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று அவர் பதவி ஏற்க இருக்கிறார். இவர் கடந்த 1950 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி பகுதியில் பிறந்தவர். கடந்த 1985 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் பணியை தொடங்கினார்.
இதை தொடர்ந்து கடந்த 2003ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் பட்டியலின பிரிவை சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி என்ற பெருமையை பி ஆர் கவாய் பெற்றுள்ளார். இவர் புத்த மதத்தை பின்பற்றுபவர். மேலும் இவர் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுவதால் 6 மாதக்காலத்திற்கு மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் கவாய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். மேலும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா நேற்று ஓய்வு பெற்ற நிலையில் தற்போது கவாய் புதிய நீதிபதியாக பொறுப்பேற்று விட்டார்.