ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்  திருமாவளவன் அறிவித்துள்ளார்..

2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி, ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் ரவி அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் சிலவற்றை நீக்கி வாசித்தார். அதன்படி திராவிட மாடல் வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு அரசு நடைபெறுகிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் படிக்கவில்லை. தமிழ்நாடு அரசு என்ற இடங்களில் எல்லாம் இந்த அரசு என்று ஆளுநர் படித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்ற பேரவையில் உரையாற்றினார்.  அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு பேரவையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசி வந்தநிலையில் பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார்.. இதற்கிடையே ஆளுநர் உரையை வாசிக்கும்போது  ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.