
தமிழகத்தில் சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் காலை முதல் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குனர் விசாகன் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே தேனாம்பேட்டை, மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
இதே போன்று சென்னை சூளைமேடு கல்யாண் புரத்தில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவனம் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மேலும் அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை செய்வதற்கு தடை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.