
தமிழகத்தில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு விமான நிலையம் அமைக்க அந்த இடத்தை தேர்வு செய்த நிலையில் மாநில அரசும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தொடர்ந்து விலை நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்றவைகள் அழியும் என்பதால் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி கொடுத்துள்ளார்.
இவர் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க காஞ்சிபுரம் காவல்துறையிடம் தமிழக வெற்றிக்கழகம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் எஸ் பி சண்முகம் கூறியுள்ளார். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற திங்கட்கிழமை சந்திக்க இருக்கிறார். மேலும் விஜய் பரந்தூர் செல்ல இருப்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அனுமதி கேட்டும் காவல்துறையிடம் கேட்ட நிலையில் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அரசியல் களத்திற்குள் நேரடியாக விஜய் வருவதாக இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.