அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு செல்லாது.

எனவே அந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு ஓபிஎஸ் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஜேசிடி பிரபாகர் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.