
கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்த படம் தான் ‘தாரே ஜமீன் பர்’. இந்தப் படம் டிஸ்லெக்ஸியா எனப்படும் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஆகும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் 2-ம் பாகத்தை நடிகர் அமீர்கான் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘சிதாரே ஜமீன் பர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளியானது.
இந்த ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு துருக்கி சென்ற அமீர்கான், அந்நாட்டு அதிபரின் மனைவியை சந்தித்தார்.
இது குறித்த வீடியோவையும், புகைப்படத்தையும் அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை காரணமாக கூறி சிதாரே ஜமீன் பர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலதுசாரிகள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் நடிகர் அமீர்கான் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். எனினும் அவர் பாகிஸ்தான் ஆதரவாளர் என வலதுசாரிகள் விமர்சித்து வருகின்றனர். சிதாரே ஜமீன் பர் படத்திற்கு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.