தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரிய பேட்டை எனும் பகுதியில் மேகலப்பதி தண்டா கிராமத்தை சேர்ந்தவர் பனோத்து பாரதி (32). இவருக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண் குழந்தையின்  மூக்கு பச்சை நிறத்தில் இருந்த காரணத்திற்காக அவரது தாயே அமானுஷ்ய சடங்குகள் செய்து நரபலியாக கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தாயே தனது 7 மாத மகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் பாரதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் பின் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் தகுந்த சாட்சிகளும், ஆதாரங்களும் பெறப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது இந்த வழக்கின் சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களை பரிசீலித்த சூரியப்பேட்டை நீதிபதி சியாமஸ்ரீ சொந்த மகளைக் கொன்ற குற்றவாளி பாரதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது ஏற்கனவே பாரதி தனது கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கடந்த ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கதாகும். நவீன காலத்திலும் மூடநம்பிக்கை காரணமாக தாயே தன் மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.