லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திடம் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ள அதிரடி மாற்றங்களை முன்னாள் பயிற்சியாளர் மைக்கேல் ஆர்தர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும் பிசிபி-யின் இந்த வழக்கமான போக்கே பாகிஸ்தான் அணியின் இன்றைய அவல நிலைக்கு முக்கியக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்த பொற்காலத்திலும், 2017 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோதும் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியவர் மைக்கேல் ஆர்தர். மோசின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக் குழுவினரை அடிக்கடி மாற்றி அணியில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாக அவர் சாடியுள்ளார்.
“பிசிபி-யின் இந்த முடிவுகள் முற்றிலும் முட்டாள்தனமானவை. வீரர்களையும், பயிற்சியாளர்களையும், தேர்வாளர்களையும் அடிக்கடி மாற்றி, அணியில் எந்தவொரு ஸ்திரத்தன்மையையும் பராமரிக்காததுதான் அவர்கள் இன்று இந்த அளவுக்குச் சிக்கலில் தவிப்பதற்குரிய முக்கியக் காரணமாகும் என்று ஆவேசமாகத் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட காலத் திட்டமிடல், ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு இருந்தால் மட்டுமே தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஹெட்டிங்லேயில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 190 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்று தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
இந்த படுதோல்விக்குப் பிறகுதான் பிசிபி அவசரக் குமுறலில் இறங்கியுள்ளது. முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி அகா, அலி உஸ்மான், குர்ரம் ஷாஷாத் ஆகியோருடன், ஒரு போட்டியில் கூட விளையாடாத ஆமிர் ஜமால் மற்றும் முகமது அவாய்ஸ் ஆகிய 7 வீரர்கள் பாதியிலேயே கழட்டிவிடப்பட்டு நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேபோல், தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் அவரது உதவிப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லே நோப்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எந்தவொரு தோல்விக்குப் பிறகும் பயிற்சியாளர்களையும், வீரர்களையும் உடனடியாக மாற்றுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், ஆர்தரின் இந்தச் சமீபத்திய கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை பர்மிங்காம் நகரில் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
