சென்னைக்கான 2-வது புதிய பசுமைப் புல்வெளி விமான நிலையம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு கட்ட ஆய்வுகளை விரிவாக மேற்கொண்டு, அதன் பிறகே பரந்தூர் பகுதியை இறுதியாகத் தேர்வு செய்தோம் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்தார்.

​சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலைய நில எடுப்பு மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு குறித்த விவாதம் எழுந்தபோது பேசிய அவர், பரந்தூருக்கு முன்பாக சோழிங்கநல்லூர், படாளம், பன்னூர் உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் இட வசதிகளைக் கருத்தில் கொண்டு அந்த இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

​தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னை போன்ற பெருநகரத்தின் அருகே ஒரு புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க எந்த இடத்தை நாம் தேர்வு செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு வகையில் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்” என்று நிதர்சனமான நிலவரத்தைப் பேரவையில் பதிவு செய்தார்.

​மேலும் தவெகவுக்குச் சவாலாகப் பேசிய அவர், “எதிர்காலத்தில் தவெக அரசு வந்து புதியதொரு இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்தாலும் கூட, நிச்சயம் பரந்தூரில் எழும் அதே போன்ற இடநெருக்கடி மற்றும் நில எடுப்புப் பிரச்சினைகள்தான் அங்கேயும் உருவாகும்” என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுத் தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.