திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு நுழையும் பல இளைஞர்கள், குறுக்கு வழியில் புகழையும் பணத்தையும் தேட முற்படும்போது எப்படிப்பட்ட விபரீதத்தில் போய் முடிகிறார்கள் என்பதற்கு இந்த அதிர்ச்சிச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
பிரபல இந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஓ.டி.டி தொடர்களிலும் துணை நடிகராக நடித்து வந்த ரோஹுல்லா மெஹ்தி என்ற இளைஞர், ரகசியமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது போலிசாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரே இதுபோன்ற சட்டவிரோதச் செயலில் கைதாகியிருப்பது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மீரா ரோடு, தகிசர் மற்றும் சாக்கி நாக்கா உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களை இலக்காக வைத்து சமூக வலைதளங்கள் வாயிலாகப் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருவதாகக் காஷிமிரா காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
குறிப்பாக ‘வாட்ஸ்-அப்’ மற்றும் ‘ஸ்னாப்சாட்’ போன்ற பிரபலமான செயலிகள் மூலம் இளைஞர்களைத் தொடர்புகொண்டு இந்த சட்டவிரோத வியாபாரம் அரங்கேற்றப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலிசார் வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு போதைப்பொருள் வாங்குவது போல் நடித்து கடத்தல்காரர்களுக்குச் சாமர்த்தியமாக வலைவீசினர்.
போலிசாரின் இந்த அதிரடித் திட்டத்தின் மூலம், தகிசர் பகுதியில் போதைப்பொருளை டெலிவரி செய்ய வந்த நடிகர் ரோஹுல்லா மெஹ்தி மற்றும் அவரது கூட்டாளியைப் போலிசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 கிராம் ‘எம்.டி’ வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர், ஷாகித் கபூரின் ‘தேவா’ திரைப்படம் உட்படப் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதிப்பதற்காகச் சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்ற இந்த நபரிடம், போலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
